Monday, January 30, 2017

பயணக் கதைகள்

இந்தப் பயணத்தின் தொடக்கத்தை நிர்ணயிப்பதே ஒரு சர்ச்சைக்குரிய விஷயம் தான். அம்மாவின் வயிற்றில் கரு உதித்த உடன் பயணம் தொடங்குமா அல்லது ஒரு உடல் கொண்டு மண்ணில் உதித்தப் பின் இதன் தொடக்கமா? என்னை பொறுத்தவரையில் இந்த மண்ணில் தனகென்று ஒரு உடலக் கொண்டு உதித்த அந்த நொடியில் நம் கதையின் துவக்கம்.

 இது ஒரு வேடிக்கையான கதை. ஏனெனில் நம் கதை தொடங்கிய அந்த நொடி நமது கதையின் முதல் பாகம் முற்று பெறுகிறது . நம்மை அறியாமல்  நம் சுயநினைவு இல்லாமல் எழுதி முடிக்கப்பட்ட அந்த முதல் பாகத்தை சில ஞானியர் முன்வினைப் பயன் என்று கூறுகின்றனர். ஆகா, நமது கதையின் முன் பாகத்தில் நமக்கு எவ்விதமான கட்டுபாடும் இல்லை. சொல்லப்போனால் நமது இரண்டாம் பாகத்தின் தொடக்கமும் அவ்வாறனதே. பிறந்து சில நிமிடங்களில் தாயின் காதில் தேன் வந்து பாய நாம் எழுப்பும் முதல் அழுகை முதல் நாம் ஒரு மழலையாக பெற்றோர் , உற்றோர், மற்றோர் மனதில் திகழும் வரையில் நம் கதை மேல் நமக்குக் கட்டுப்பாடு இல்லை.

கதாநாயகனாக, கதாநாயாகியாக விளங்கும் நமக்கு இந்த கதை மேல் அதிகாரம் இருக்கிறதா? எனது கதைத் தொடங்கி ௨௯ ஆண்டுகள் முடிவதைந்து விட்டன. இனி எதனை ஆண்டுகளில் கதை முற்றுப் பெரும் என்பதை அறியேன். கதாநாயகியான நான் கதையின் ஆசிரியையாக மாற முடியுமா? அல்லது கதாசிரியரின் மனதை என் போக்கிற்கு திசை திருப்ப முடியுமா? அல்லது கதையின் எல்லா பகுதிகளிலும் சிறப்பாக தான் நடிக்க முடியுமா?

இந்தக் கேள்விகளை நெஞ்சில் சுமந்துக் கொண்டு என் கதையில் இடம் பெற்றுள்ள மற்ற பாத்திரங்களை நோக்கி கவனத்தைத் திருப்புகிறேன்.